எவ்விதமான விருந்து அழைத்தால் நாம் செல்ல வேண்டும்?

 


எவ்விதமான விருந்து அழைத்தால் நாம் செல்ல வேண்டும்? அதாவது,


ஒரு வரை விருந்து அழைப்பதானால் எவ்வாறெல்லாம் அழைக்க வேண்டும்?


பதில்


ஒரு மூஃமீன் இன்னொரு மூஃமினுக்கு செய்யும் கடமைகளில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறியது விருந்தோம்பல்.,


நாம் அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த வழிக்கு முரண்பட்ட இடங்களில் விருந்துக்கு செல்லக்கூடாது.


அது இல்லாமல் அழைக்கப்படும் விருந்தை நாம் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பண்டிகைகளுக்கும்,விஷேஷங்களுக்கு மட்டும் அழைப்பது என்பது இங்கு வழக்கமாகிவிட்டது.


ஆனால் உறவுகளை பலப்படுத்தும் விதமாக எப்போது வேண்டுமானாலும் நாம் உறவினர்களை, நண்பர்களை அழகிய முறையில் அழைக்கலாம். மாற்றுமத நண்பர்களை கூட இஸ்லாமிய மார்க்கத்தை எத்திவைக்கும் விதமாக விருந்தளிக்கலாம்.


நபி (ஸல்) அவர்கள் காலத்தை போன்று இப்போதுள்ள காலத்தில் யாருக்கும் உணவில்லாமல் இருப்பதில்லை., இருந்தாலும் கூட இப்பொழுது விருந்தளிப்பது குறைந்து விட்டது.


ஆனால் அழகிய முறையில் அவர்களை மனப்பூர்வமாக அவர்களை அழைத்து, அவர்கள் தங்க நேரிட்டால் அவர்களுடைய தேவைகளை இன்முகத்துடன் பூர்த்திசெய்ய வேண்டும். அவர்களை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்விற்கு மகிழ்ச்சியளுக்கும் செயல்களில் ஒன்றாகும்


பொதுவாக ஒரு முஸ்லிம் தான் விரும்பும் நேரத்தில் காரணம் எதுவுமில்லாமல் விருந்தளிக்கலாம். இது மார்க்கத்தில் சிறந்த செயலாக சொல்லப்பட்டுள்ளது.


இது போன்ற விருந்துகளை ஒருவர் விரும்பும் நேரத்தில் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் அது மற்றவர்களுக்கு எந்தச் சிரமத்தையும் தராது.


ஆனால் வீட்டில் நடக்கும் விஷேசங்களைக் காரணம் காட்டி விருந்தளிக்க ஆரம்பித்தால் அது போன்ற விஷேசங்களைச் சந்திக்கும் அனைவரும் அது போல் கொடுக்க வேண்டும் என்ற சமூக நிர்பந்தம் ஏற்படும். இதைப் பார்த்து வசதியற்றவர்களும் கடன் வாங்கி சிரமப்பட்டு விருந்தளிக்கும் நிலை ஏற்படும். நாம் விருந்தளிக்காவிட்டால் அதை மக்கள் கேவலமாக கருதுவார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காகவே விருந்து அளிக்கும் அவசியம் ஏற்படும்.


நபியவர்களுடைய வழிகாட்டுதலில் இல்லாத பல புதிய விருந்துகள் மக்களிடையில் தோன்றி அவை இன்று சமூக நிர்ப்பந்தமாக உருவெடுத்து பொருளாதார ரீதியாக மக்களை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன.


இறப்பு விருந்து,


ஹஜ் பயண விருந்து,


திருமணத்தை முன்னிட்டு அளிக்கப்படும் பெண் வீட்டு விருந்துகள்,


திருமண நிச்சயதார்த்த விருந்து

பெயர் சூட்டும் விருந்து


பாத்திஹாக்களின் பெயரால் பல விருந்துகள்


கத்னா விருந்து,


பெண் சடங்கு விருந்து,


வளைகாப்பு விருந்து


போன்ற பல விருந்துகள் இன்று சமூகத்தால் கட்டாயக் கடமையாகப் பார்க்கப்பட்டு, அளிக்கப்பட்டும் வருகிறது. வணக்க வழிபாடுகளில் கூட கவனம் செலுத்தாத முஸ்லிம்கள் இந்த விருந்துகளை ஏதோ மார்க்க்க் கடமை போன்று, கருதி கடன் பட்டு, பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.


நமது சமுதாயத்தில் ஒரு பெண் கர்ப்பமாவதை முன்னிறுத்தி பல விருந்துகள் மணமகன் வீட்டாரால் பெண் வீட்டார் தலையில் சுமத்தப்படுகிறது. முதல் மாதம் ஒரு விருந்து, மூன்றாம் மாதம் மற்றொரு விருந்து, ஏழாம் மாதம் அடுத்த விருந்து என அடுத்தடுத்து பல விருந்துகள் அளித்தே பெண் வீட்டார் பிச்சைக்காரர்களாகும் அவலம்.


இது போன்று மார்க்கம் காட்டித்தராத எந்த விருந்துகள் மக்களிடையில் கட்டாயக் கடமையாகப் பார்க்கப்பட்டு சடங்காக நிறைவேற்றப்படுகிறதோ அவற்றை சமுதாய நலன் கருதி, அதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தவிர்த்துக் கொள்வது நமது கடமை. இதுவே நபிவழியாகும்


ஆதாரங்கள்


5173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"" உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்! என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்


5178. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்““  ஓர் ஆட்டுக் காலின் கீழ்ப்பகுதி(யை விருந்தாக்கி, அந்த விருந்து)க்கு நான் அழைக்கப்பட்டாலும் நிச்சயம் நான் (அந்த அழைப்பை) ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக்காலின் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 114

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்


📙5635. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும் படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.  மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்


அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),


நூல் : புகாரி 6018


ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ए),


நூல் : புகாரி 12

Comments